wife rescued her husband from his lover

திருச்சியைச் சேர்ந்தவர் சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் கணினி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இத்தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்த மகன் என்ஜீனியரிங்கும், 2வது மகன் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

சமீபகாலமாக சுந்தர் தனது குடும்பத் தேவைகளை கவனிக்காமல், தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எந்த நேரமும் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதையே சுந்தர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கணவரின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்ட அமலா, அவரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினார். 

அப்போதுதான் தனது கணவருக்கு துறையூரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அமலாவுக்குத் தெரிய வந்தது. அப்பெண் ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருவதும், அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சுந்தர் செய்து கொடுத்து வந்திருந்தார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அமலா தனது மூத்த மகனுடன் துறையூருக்குச் சென்றார். ஆனால் அப்பெண்ணின் வீடு பூட்டிக் கிடந்தது. விசாரிக்கும் போது தனது கணவனின் கள்ளக் காதலி பெங்களூரு சென்றிருந்தது தெரிய வந்தது. 

இருப்பினும் மனம் தளராத அமலா,பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றார். திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அப்பெண் வரும் வரை வீட்டுக்குள்ளேயே இருப்பது என்று முடிவெடுத்த அமலா, தனது மகனுடன் சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். 

இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ஊர் திரும்பிய திவ்யா, வீடு திறந்து கிடந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தனது கள்ளக்காதலனின் மனைவி மற்றும் மகன் இருப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். 

ஆவேசத்தையும், கோபத்தையும் மனதிற்குள் பூட்டி வைத்த அமலா, திவ்யாவின் மீது பாய அப்பகுதியே போர்க்களமானது. சரமாரித் தாக்குதலால் நிலைகுலைந்த கள்ளக் காதலி திவ்யா, உதவிக்கு கூக்குரலிட, அக்கம்பக்கத்தினர் திருடர்கள் என நினைத்து அமலாவையும், அவரது மகனையும் அடிக்கத் தொடங்கினர். 

இது குறித்து தகவலறிந்ததும், நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரம் வீதிக்கு வந்ததது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனைவியுடன் குடும்பம் நடத்துவதாக உறுதி மொழி அளித்ததைத் தொடர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.