நெல்லையில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர்  காந்திமதி நாதன். கூலிர் தொழிலாளியான இவரது மனைவி  இசக்கியம்மாள்  அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

 காந்திமதி நாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம். நேற்று மதியம் வழக்கம்போல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர், பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காந்திமதி நாதன், இசக்கியம்மாளை கடப்பாரையால்  சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  உயிரிழந்தார்.

இந்நிலையில் இரவு வெகுநேரம் ஆகியும் இசக்கியம்மாள் வீட்டு கதவு சாத்தியபடியே இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து  தப்பியோடிய காந்திமதி நாதனை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.