நாகர்கோவில்
நாகர்கோவிலில், மனைவியை கட்டையால் அடித்துவிட்டு, அவர் இறந்து விடுவாரோ? என்ற பயத்தில் கணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நாகர்கோவில் மாவட்டம் வடசேரி சின்ன இராசிங்கன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (76). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி அமராவதி (66). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இலட்சுமணப் பெருமாள் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்களில் ரேவதி என்ற மகள் தனது கணவரைப் பிரிந்ததால், அவரும், அவருடைய மகனும் தாய், தந்தையுடன் ஒன்றாக வசித்து வந்தனர்.
வீட்டின் மாடியில் முருகன் தனது மனைவி அமராவதி, மகள் ரேவதி, பேரன் ஆகியோருடன் வசித்து வந்தார். அவருடைய மகன் இலட்சுமணப் பெருமாள், மனைவியுடன் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வருகிறார்.
முருகன் கடந்த சில வருடங்களாக சரியாக வேலைக்கு போகாததால் இதுதொடர்பாக அவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
மேலும் அமராவதி தன்னுடைய ஓய்வு நேரத்தில் அருகிலுள்ள நூலகத்துக்கு பத்திரிகைகள் படிக்கச் செல்வார். இதைப் பார்த்த முருகன், அமராவதியிடம் வயதான காலத்தில் ஏன் அங்குமிங்குமாக சென்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அமராவதி வடசேரி சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்துள்ளார். அப்போதும் முருகன், அமராவதியிடம் சொன்னதை கேட்க மாட்டாயா? ஏன் வயதான காலத்தில் சந்தைக்குப்போய் காய்கறி வாங்கி வருகிறாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வலுத்துள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் கிடந்த ஒரு கட்டையால் அமராவதியின் தலையில் அடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவரது கண்ணுக்கு மேல் நெற்றிப் பகுதி மற்றும் முகத்தில் அடி விழுந்தது.
இதில் அமராவதியின் முகத்தில் இருந்து இரத்தம் பாய்ந்தோடியது. இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வீட்டில் இருந்த முருகனை சிலர் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் அடித்த அடியில் உங்களது மனைவி இறந்து போனால் நீங்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ள்ளனர்.
தான் தாக்கியதில் மனைவி இறந்து விடுவாரோ? நம்மை காவலாளர்கள் கைது செய்து விடுவார்களோ என அவர் பயந்து வீட்டின் மாடிப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாடிக்குச் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம், வடசேரி ஆய்வாளார் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வடசேரி காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
