உண்மையைப் பேசுவதற்கு முன்பு எவ்வளவு உஷாராக இருக்கவேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாய் மாறியிருக்கிறார் சென்னை பல்லாவரம் பகுதியச் சேர்ந்த பரிதாப கணவர் ஒருவர். தொட்டுத்தாலி கட்டிய மனைவியை ‘நீ அழகா இல்லை’ என்று சொன்னதற்கு ஸ்பாட் பனிஷ்மெண்டாக அவரது முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றினார் அந்த அருமை மனைவி.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம்வெஸ்லி (36).  இவர் மனைவி கிறிஸ்டி (34). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. சியாம்வெஸ்லி நாள் தவறாமல் குடிக்கும்  ஒரு சிறப்பான குடிகாரர். குடிபோதையில் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பிட்டோமே போர்வையை நன்றாக இழுத்துப்போர்த்தித் தூங்கினோமா என்று இல்லாமல் மனைவியை அடிக்கடி வம்பிழுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு தன் மனைவி அழகு இல்லை. சுமார் என்கிற உண்மையே தெரிந்திருக்கிறது. அந்த உண்மையைப்போட்டு உடைத்து  வழக்கம் போல் மது போதையில் அழகுப்பற்றி பேசி வம்பிழுக்க ஆத்திரமடைந்த மனைவி கிறிஸ்டி கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரை எடுத்து வந்து கணவன் சியாம் வெஸ்லி முகத்தில் ஊற்றியுள்ளார். 

இதனால் முகம் வெந்து சியாம்வெஸ்லி அலறி துடித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறி துடித்த சியாம் வெஸ்லியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர். இந்த விவகாரம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்மார்களே மனைவிகள் கிட்ட உண்மைகளைப் பேசுறதுக்கு முந்தி கொஞ்சம் உஷாரா இருங்க. நமக்கு மூஞ்சி முக்கியம்.