திண்டுக்கல்
 
திருமணத்துக்கு பிறகு கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் காவலாளர்கள் தங்களை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து கணவரும் விஷம் குடித்து இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தொப்பம்பட்டி அப்பனூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுத்துரை. இவருடைய மகன் தங்கராஜ் என்ற நடராஜ் (35). விவசாயியான இவர் உறவினர் பெண்ணான அதே பகுதியைச் சேர்ந்த கௌதமி (22) என்பவரை காதலித்து வந்தார். 

பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர், நடராஜ், தந்தை வீட்டருகே உள்ள தோட்டத்து வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு நவனீஸ் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது.

கௌதமி பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தபோது நடராஜுக்கும், அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால், தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதனையொட்டி தனது கணவரிடம் அனுமதி கேட்டதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கௌதமி வீட்டில் நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அங்கு வந்த நடராஜின் உறவினர்கள், கணவன் - மனைவி இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கீரனூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கௌதமி விஷம் குடித்ததால் காவலாளர்கள் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் நடராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிகிறது என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.