Why not stop the vehicle? sub inspector attacked former councilor
தருமபுரி
வாகன தணிக்கையின்போது சொன்னவுடனே வண்டியை ஏன் நிறுத்தல? என்று பெரியாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை (கவுன்சிலர்) நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த உதவி ஆய்வாளரை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (57). இவர் பெரியாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.
இவர் நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். வழியில் பெரியாம்பட்டி பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காரிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் இளவரசன் அவரை கை காட்டி நிறுத்தி உள்ளார்.
ஜெயவேலும் மோட்டார் சைக்கிளை சற்று தூரம் தள்ளிச் சென்று ஓரமாக நிறுத்திவிட்டு வந்துள்ளார். இதற்கு உதவி ஆய்வாளார் இளவரசன், "வண்டியை சொன்னவுடனே நிறுத்தாமல், ஏன் தூரமாக கொண்டுபோய் நிறுத்தினாய்" என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் இளவரசன், ஜெயவேலை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த மற்ற காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அவர்கள் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஸ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவலாளர்கள் ஜெயவேலை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், மாலையில் பெரியாம்பட்டி திரும்பிய ஜெயவேல் தனது உறவினர் மற்றும் மக்களிடம் காவல் நிலையத்தில் அவரை காவலாளர்கள் அடித்ததாகவும், 4 மணி நேரம் ஒரு கைதியை போல் நடத்தியதாகவும் நடந்ததைக் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரியாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரியாம்பட்டி பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் காவலாளர்கள் பெரியாம்பட்டி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், மறியல் தொடர்ந்தது.
பின்னர், தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியாம்பட்டி விரைந்து வந்து சாலைமறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஜெயவேலை தாக்கிய உதவி ஆய்வாளர் இளவரசனை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். இதற்கு, "உதவி ஆய்வாளர் இளவரசனிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி கூறினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
