Asianet News TamilAsianet News Tamil

சம்பள நாளில் இப்படி பண்ணீட்டீங்களே மோடி…

why modi-did-like-thisthis-is-unfair
Author
First Published Dec 1, 2016, 11:35 AM IST


மாதம் முழுவதும் சிரமப்பட்டு உழைத்து, முதல் நாள் தான் பெறப்போகும் சம்பளத்தை வைத்து குடும்பத்தின் தேவைகளை தீர்த்துவிடலாம் என்று எண்ணி இருக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த மாதம் போதாத காலம். பணம் எடுக்க முடியாமல் பெரும் அவதிப்படும் மக்கள் பிரதமரைப் பார்த்து, “இப்படி பண்ணீட்டீங்களே மோடி” என்றுதான் வருந்துகின்றனர்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி இந்தியா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், தபால் அலுவலகங்களில் விடுமுறை நாட்களைத் தவிர தினமும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வெறும் 2000 ரூபாய் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

தங்களது தேவைகளுக்கு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.மையங்களில் போதிய பணம் கிடைக்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஆனால் வங்கிகள் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்க, நிறைய விதிமுறைகளை விதிப்பதால் அந்த நிகழ்ச்சிகளையே பலர் தள்ளி வைத்து வருகின்றனர். இன்னும் சிலர், திருமணங்களில் டீ வாங்கிக் கொடுத்தும், 500 ரூபாயில் திருமணத்தை முடித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமை மாத கடைசி நாள் என்பதாலும், அரசு ஊழியர்களுக்கு சம்பள நாள் என்பதாலும் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் வங்கி முன்பு பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவே பணம் கொடுக்கப்பட்டதால் கடும் கோபம் அடைந்தனர்.

அதேபோல அதிகாலையில் இருந்தே ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க மக்கள் குவிந்தனர். ஆனால் பல ஏ.டி.எம். மையங்கள் திறந்து இருந்ததே தவிர அதில் பணம் நிரப்பப்படாததால் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் சம்பள நாளில் பணம் எடுக்க முடியாமலும், தங்களது தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது குறித்து கரூரில் உள்ள ஒரு வங்கி ஊழியர் கூறியதாவது:-

கரூரில் உள்ள வங்கிகளுக்கு தினமும் ரூ.5 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை மட்டுமே வருகிறது. இதனைதான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். ஆனால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு பணம் புழக்கம் இல்லை.

மேலும், தினமும் ஏ.டி.எம். மையங்களில் குறைந்த அளவு பணமே வைக்க முடிகிறது. இதனால் பணம் வைத்த ஒரு மணி நேரத்திற்குள், பணம் தீர்ந்து விடுகிறது. மேலும், கரூர் நகருக்கு செவ்வாய்க்கிழமை முதல் 500 ரூபாய் புதிய நோட்டு வந்துள்ளது. அதுவும், குறைந்த அளவு தான்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, பொதுமக்களிடம் கேட்டபோது, “இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து நாங்கள் படும் பாட்டை சொல்லி மாளாது. கருப்பு பண முதலைகளை பிடிக்கிறேன் என்று எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது நல்லதல்ல. மாத சம்பளத்தை வைத்து தான் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம். இந்த முறை அதுவும் கடினம் தான். கார்ப்பேரேட்டுகளுக்கு ஆதரவா இருந்துட்டு, மக்களுக்கு துரோகம் பண்ணிட்டாரே மோடி” என்று வரிசையில் நின்று வெறுத்துப் போன மக்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios