Why Chennai may not be ready for heavy rain even faced last two years

கடந்த இரு வருடங்களை விட இந்த வருடம் மழை பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அந்த இரண்டாண்டு பாதிப்புகளில் இருந்து அரசு இன்னும் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வடகிழக்குப் பருவ மழை துவங்கியதுமே, வானிலை ஆய்வு மையம் பலத்த மழை எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இனியாவது அரசு மேற்கொண்டு களத்தில் இறங்கியாக வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை இந்த வருடம் வழக்கத்தை விட 111 சதவீதம் அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கு ஏற்ப, கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை விட்டு விட்டுப் பெய்தாலும், நேற்று கன மழை பெய்தது. குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இப்போதே சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து, மேலும் மழை வந்தால் ஏற்படக் கூடிய ஆபத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மாநகராட்சியும், காவல்துறையும் மழைக்கால முன்னேற்பாடுகளை எப்படிச் செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் சைதாப்பேட்டை அடையாறு பாலத்தில் நின்றபடி களத்தை ஆய்வு செய்ததை இரு தினங்களுக்கு முன்னர் காண முடிந்தது. சென்னையை இணைக்கும் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்வது சைதை பாலம். அடையாற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் குடிசைப் பகுதிகளில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதும், அதனால் சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின் போதே பெரும் மணல் திட்டாக குவித்து ஆற்றின் நடுவே மண்மலையையே கட்டி வைத்திருக்கிறார்கள். அவை குடிசைப் பகுதிகளுக்கு அரணாகத் திகழும் என்பது கணிப்பு. ஆனால் அதுவே வெள்ள நீரை செல்ல விடாமல் அடைத்து, வெள்ளத்தை மேலும் பெருகச் செய்து ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொது மக்கள். 

வெள்ளம் வந்தால், கூவம் நதி பகுதியும் வடசென்னைப் பகுதிகளும் பெரும் சிரமத்தை சந்திக்கும். வியாசர்பாடி, பெரம்பூர், திருவொற்றியூர், எண்ணூர் என சரக்கு போக்குவரத்து மிகவும் கொண்ட அந்தப் பகுதிகளில் மிக மோசமான சாலைகள் இப்போதும் காட்சி அளிக்கின்றன. அண்மையில் சென்னை பெருநகர மாநகராட்சியில் இணைந்த இப்பகுதியில் இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இந்தப் பகுதி மேலும் மோசமாகிக் கிடக்கிறது. சாலை விபத்துகளைத் தவிர்க்க, போலீஸாரே ஆங்காங்கே சாலைகளில் கற்களைக் கொட்டி, களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடமும், அதற்கு முன்பும், நவம்பர் முதல் வாரத்தில் இருந்தே கன மழை பெய்து, பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியிருந்தன. மண்ணில் நீர் புகுந்து, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து, மண் ஊறியிருந்தது. இதனால், டிசம்பர் மாதம் 1ம் தேதி பெய்த பெருமழையில், மேலும் நிலத்தில் நீர் வடிய வழியின்றி, ஏரிகளும் நிரம்பித் ததும்பி கரைகளை மீறி வெள்ளம் ஏற்பட்டது. அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களில் அரிப்பும் ஏற்பட்டது. 2015 டிச.1ல் அந்த ஒரு நாளில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டு, சென்னையே மூழ்கடிக்கப் பட்டதை சென்னைவாசிகள் எவரும் மறக்க மாட்டார்கள். இந்நிலையில், இதே போன்ற நிலை, இந்த வருடமும் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் தன்னார்வலர்கள். 

இப்போதே மழை பெய்து, நிலத்தில் நீர் சேர்ந்தால், டிசம்பர் மாத மழை சென்னைக்கு வழக்கம் போல் பெரும் சிக்கலைத் தரக் கூடும். 2015ல் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் இந்தப் பெரு வெள்ளம் ஏற்பட்டது என்று கூறி நடவடிக்கை எடுப்பது போல் களத்தில் இறங்கிய அதிகாரிகள், பின்னர் தொய்வடைந்து பின் வாங்கினர். இப்போதோ, அதை விட பெரும் ஆக்கிரமிப்புகள் ஏரிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஏரிகளுக்கு நடுவே வீடுகளைக் கட்டி, தங்கள் வீடுகளுக்குள் ஏரியில் சேரும் நீர் வந்துவிடக் கூடாது என்று, கரைகளை உடைத்து விடுகின்றனர் ஆக்கிரமிப்பாளர்கள். 

இந்நிலையில், இந்த வருட மழையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று சென்னைவாசிகள் கவலையுடன் இருக்கின்றனர். அதிகாரிகளும் அதற்கு ஏற்ப, ஆலோசனை கூட்டங்களை நடத்தி, தற்காப்பு நடவடிக்கை குறித்து பேசி வருகின்றனர். கடந்த இரண்டு வருடத் தவறுகளே, இந்த வருடத்தில் தவறுகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள ஓர் அனுபவப் பாடமாக இருக்க வேண்டும். அரசு குறட்டைத் தூக்கத்தில் இருந்து விழித்தெழுமா? மக்களும் தங்கள் பங்குக்கு தங்கள் உடைமைகளைக் கோட்டை விடாமல் காத்துக் கொள்வார்களா?