Asianet News TamilAsianet News Tamil

பேரா.நிர்மலாதேவிக்கு பின்னால் யார்? யார்? இழுத்தடிக்காமல் விசாரணையை சீக்கிரம் முடித்து தண்டிக்க வேண்டும் - ஜி.கே.மணி...

Who is behind the nirmaladevi? hurry up investigation and give punishment- GKMani ...
Who is behind the nirmaladevi? hurry up investigation and give punishment- GKMani ...
Author
First Published Apr 18, 2018, 9:35 AM IST


விழுப்புரம்
 
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி பேரா. நிர்மலாதேவிக்கு பின்னால் யார்? யார்? உள்ளனர் என்பதை சீக்கிரம் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

வன்னியர் சங்க தலைவர் குரு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி விழுப்புரம் மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று காலை விழுப்புரம் கைலாசநாதர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் குரு பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, 

மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தன்ராஜ், நகர தலைவர் போஜராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசியது:

"வன்னியர் சங்க தலைவர் குரு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மருத்துவர்களிடம் கலந்துபேசி  தரமான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது குருவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதார உரிமை. நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், அதிகாரம் இல்லாத அமைப்பை உருவாக்கினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். எதிர்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரிநீர் வராவிட்டால் 19 மாவட்டங்கள் பாலைவனமாகும். 

இந்தியா - பாகிஸ்தான் நதிநீர் பங்கீடுகூட சரியாக உள்ளது. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே, இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

காவிரி பிரச்சனைக்காக எந்த கட்சிகள் போராடினாலும் பா.ம.க., அவர்களுக்கு ஆதரவு தரும், அவர்களுடன் துணை நிற்கும். காவிரி பிரச்சனையில் எல்லோரையும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெண் இனத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய அவமானம். படிக்கப்போகும் பெண்களுக்கு பாதிப்பு என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். 

இந்த குற்றத்திற்கு பின்னால் யார், யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விசாரணை ஆணையம் என்றாலே காலம் தாழ்த்துதல் என்பது கடந்த கால உண்மை. அது இந்த விசாரணையில் இருக்கக் கூடாது" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios