தருமபுரி

உண்மையில் மடையர்கள் என்போர், கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது, நீருக்குள் மூழ்கி மடைகளைத் திறந்துவிடும் சாகசப் பணியை மேற்கொள்வோர் என்று விளக்கினார் சூழலியல் எழுத்தாளர் பாமயன்.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ் கலை இலக்கியப் பட்டறை சார்பில் நேற்று இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வாரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பட்டறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். புவிதம் பள்ளியின் தாளாளர் மீனாட்சி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சதீஷ் வரவேற்றார். 

இந்த விழாவில், சூழலியல் எழுத்தாளர் பாமயன் பங்கேற்று பேசினார். அவர், "மாட்டுப் பொருளாதாரம் என்பது மிகப் பெரிய விஷயம். மூங்கில் மற்றும் மாட்டுச் சாணத்தைக் கொண்டு மிக மிகக் குறைந்த செலவில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள முடியும். ஒரேயொரு மாட்டின் சாணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ. 3 இலட்சம் வரை ஆகும் உரச் செலவை ஈடுசெய்ய முடியும்.  

கம்பி, சிமென்ட் இல்லாமல் ஒரு வீட்டுக்கு வரைபடம் தயாரித்து கட்ட முடியுமா? என்று தற்போதுள்ள பொறியியல் மாணவர்களிடம் நம்மால் கேட்க முடியுமா?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆகியவற்றில் சிமென்ட், கம்பி, மணல் பயன்படுத்தவில்லை. நம்முடைய பாரம்பரியம் மிக்க அந்தக் கலையை நாம் தொடர்ந்திருந்தால், நம்முடைய ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்காது; ஆறுகள் வளமாக இருக்கும்.

மாட்டின் கொம்புகளைக் கொண்டுதான் சீப்புகள் தயாரிக்கப்பட்டன. ஏராளமானோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வரும் சீப்புகள் அத்தனையும் பிளாஸ்டிக் சீப்புகள். யாரோ தயாரித்து அவற்றை நாம் வாங்கி விற்கிறோம். 

கருப்பாக இருப்பதாலேயே எருமைகளை விலக்கி வைத்திருக்கிறோம். எருமை மாட்டைப் போல என மற்றவரை இழிவாகப் பேசுவதற்காகவே பயன்படுத்துகிறோம். 

யானை இருக்கும் காடு வளமான காடு என்று அடையாளப்படுத்துவதைப் போல, எருமை வாழும் மண் வளமான மண் என்ற குறியீடு உள்ளது.

மடையர்கள் என இயல்பாக பலரையும் கேவலமாகப் பேசுகிறோம். உண்மையில் மடையர்கள் என்போர், கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது, நீருக்குள் மூழ்கி மடைகளைத் திறந்துவிடும் சாகசப் பணியை மேற்கொள்வோர்.

இரசாயன உரம் போட்டு வளம் குறைந்த மண்ணை சுலபமாக மீட்டெடுக்க முடியும். தானியக் குடும்பம், எண்ணெய் வித்துக் குடும்பம், மளிகைப் பொருள் குடும்பம், தீவனப் பயிர்க் குடும்பம், பசுந்தாள் உரக்குடும்பம் ஆகியவற்றில் விதைகளைக் கலந்து தூவிவிட்டு பயிராக வளரவிட்டு, மண்ணில் மடித்து உழுதுவிட்டால் போதும், அத்தனைச் சத்துகளும் மண்ணுக்கு மீளக் கிடைத்துவிடும்.

எல்லா சாகுபடியும் சந்தையை நோக்கியே என்று மாறிவிட்ட பிறகு, நம்முடைய விவசாயம் நட்டமான  ஒன்றாகவும் மாறிவிட்டது. நெல்லுக்குப் பிறகு உளுந்து என மாற்றிப் பயிரிடும் பழக்கத்தை கைவிட்டதால் இந்த அவலம்.

மண்ணுக்குத் திருப்பித் தருதல் என்ற விதியை நாம் மறந்துவிட்டோம். நண்பரிடம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காமல் விட்டால் எப்படி நட்பு முறிந்துவிடுமோ அப்படித்தான், மண்ணிலிருந்து எடுத்த கடனைத் திருப்பிச் செலுத்துதலும். வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய தற்சார்புப் பொருளாதாரத்தை இழந்துவிட்டோம்" என்று அவர் கூறினார்.

விழாவின் இறுதியில் கார்த்திகேயன் நன்றித்  தெரிவித்தார்.