துடியலூர்

கோவையில் சிகிச்சை பெற்று காட்டுக்குத் திரும்பும் நிலையில் இருந்த பெண் யானை மீண்டும் மயக்கம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை பெரியதடாகத்தை அடுத்த அனுவாவி சுப்பிரமணியன் கோவில் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. காட்டுப் பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள், அபகரித்து ஆசிரமங்கள், தியான மடங்கள் என கட்டிக் கொள்வதால், யானைகள் வேறு வழியின்றி விவசாய நிலங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்கள் மற்றும் பயிர்களை தின்றும், சிலவற்றை சேதப்படுத்தியும் செல்கிறது.

இந்த நிலையில் சிட்டைபெருக்கி பள்ளம் என்ற இடத்தில் கடந்த 19–ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை மயங்கி கிடந்தது. இதை அறிந்த கோவை மாவட்ட வன அலுவலர் இராமசுப்பிரமணியம், உதவி வன அலுவலர் பிரபா ஆகியோர் தலைமையில் கால்நடை மருத்துவர் மனோகரன், உதவி மருத்துவர் ஜெயந்தி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானையின் மயக்கம் தெளிவதற்கு சிகிச்சை அளித்தனர்.

யானைக்கு பழங்கள், தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. மேலும் யானைக்குச் சோர்வு நீங்க 18 பாட்டில் குளுக்கோஸ் வியாழக்கிழமை கொடுக்கப்பட்டது. யானை நீண்ட நேரம் வெயிலில் இருந்ததால், அதன் உடல்நிலையை சரிப்படுத்த யானை மீது சாக்கு போட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.

மேலும் தீயணைப்புத்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு கயிறு கட்டி யானையை எழுப்ப முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இதையடுத்து சாடிவயல் பகுதியில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு யானையை எழுப்பும் முயற்சி நடந்தது. இது போன்ற தொடர் முயற்சியின் காரணமாக வியாழக்கிழமை இரவு அந்த பெண் யானை எழுந்து அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, காட்டுக்குள் சென்றது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் அந்த யானை மலை அடிவாரத்தில் மயங்கி கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் யானை எழுந்து காட்டுக்குள் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த யானை மீண்டும் மயக்கம் அடைந்து மலை அடிவாரத்தில் கிடப்பது வருத்தம் அளிக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் யானையை தனியாக கொண்டு சென்று தொடர் சிகிச்சை அளித்து அது முழுமையாக குணம் அடைந்த பின்னர் வனப்பகுதிக்குள் விட வேண்டும்” என்று தெரிவித்தனர்.