Where is the wage for the work weve worked for six months? Workers wait for the wait

புதுக்கோட்டை

ஆறு மாதங்களாக நாங்கள் உழைத்த உழைப்பிற்கு கூலி எங்கே? என்று கூலி தொகையை கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

இந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் உழைத்த உழைப்பிற்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது.

இதுகுறித்து தொழிலாளர்கள், ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், பல்வேறு ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்தியும் இதுவரை கூலி வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கறம்பக்குடி விவசாய தொழிலாளர்கள், 100 வேலைத் திட்ட தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

“ஆறு மாத கூலி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,

கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்,

வேலை நாளை அதிகரிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உடையப்பன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் பாத்திரங்களைக் கொண்டுவந்து அலுவலகம் முன்பே சமையல் செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், துரைமணிசேகரன், காவல் ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.