Where do we go if we want to vacate homes without replacement? - people ...

கடலூர்

கடலூரில், கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாற்று இடம் தராமல் வீடுகளை காலி செய்ய சொன்னதால் நாங்கள் எங்கே போவது என்று கேள்வி எழுப்பிய மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கெடிலம் ஆற்றின் மேற்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றப்படாத நிலையில் புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை ஆற்றங்கரையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை மக்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுப்பாளையம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மின் இணைப்பை துண்டிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதனிடையே மின் இணைப்பை துண்டிப்பதைக் கண்டித்தும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் அளிக்கக் கோரியும் மக்கள் பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து மக்கள், "நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கும், ஆற்றில் தண்ணீர் இருக்கும் இடத்துக்கும் இடையே 200 மீட்டர் தூரம் உள்ளது. அதனால் எங்கள் வீடுகளையொட்டி மண்ணைகொட்டி புதிதாக கரை அமைக்கலாம். இல்லையென்றால் மாற்று இடம் கொடுத்துவிட்டு வீட்டை இடித்துக் கொள்ளட்டும். படிக்கிற எங்கள் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் வீடுகளை காலி செய்ய மூன்று மாதம் அவகாசம் தர வேண்டும். அதற்குள் எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும்" என்று தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, பா.ம.க. துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலர் ஆனந்த், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் ஆனந்த், அலமுதங்கவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தால் பாரதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து புதுநகர் ஆய்வாளர் சரவணன் விரைந்து வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.