Asianet News TamilAsianet News Tamil

என்னது ஜெயலலிதா படத்தை அகற்றுவதா? காவலாளர்கள் தடுப்பை மீறி திரண்ட அதிமுகவினர்;

What was the destruction of her image Atimukavinar cumulative security guards in defiance of blocking
what was-the-destruction-of-her-image-atimukavinar-cumu
Author
First Published Mar 10, 2017, 9:42 AM IST


விருத்தாசலம்

மக்கள் அதிகாரம் அமைப்பினர், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவ படத்தை அகற்றப் போவதாக தெரிந்து, விருத்தாசலத்தில் அரசு அலுவலகங்கள் முன்பு காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர் காவலாளர்கள் தடுத்தும் போகாததால் பதற்றம் நிலவியது.

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா உருவபடத்தை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கடந்த மாதம் 20-ஆம் தேதி விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது திடீரென சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா உருவபடத்தை உடைத்தனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா உருவபடத்தை அகற்றப்போவதாக தகவல் பரவிற்று. இதனை அறிந்த காவலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர்.

மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பாண்டியன், குத்தாலிங்கம், ஆய்வாளர்கள் ராஜதாமரைபாண்டியன், ராஜா, தமிழ்மாறன், தாமரை, கனகரத்தினம் ஆகியோர் தலைமையில் நகராட்சி அலுவலகம், சட்டமன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் முன்பும், அம்மா உணவகம் முன்பும் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த அதிமுக முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சந்திரகுமார், நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, நகர துணை செயலாளர் சத்யாசெல்வம், ஆசாத், நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் அந்தந்த அரசு அலுவலகங்கள் முன்பு திரண்டனர். \

இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நகர ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் தலைமையில் ஐந்து பேர் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக தகவல் பரவியது. அங்கும் அதிமுகவினர் முகாமிட்டிருந்தனர்.

இதையடுத்து அசோக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் காவல் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று நகராட்சி ஆணையர் அசோகனை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “விருத்தாசலம் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபடத்தையும், விளம்பரத்தையும் அகற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். எனவே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம், விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனுகொடுக்க வந்ததை அறிந்ததும், அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது காவலாளர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவலாளர்கள் தடுப்பையும் மீறி அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மனுகொடுத்துவிட்டு வெளியில் வந்த அசோக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios