நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அண்மையில் பெய்த கொஞ்ச மழைக்கு, எதை சாகுபடி செய்ய என்ற விரக்தியில் விவசாயிகள் இருக்கின்றனர்.

மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்டுள்ள வேதாரண்யம் பகுதியில் சவுக்கு மரங்கள் வளர்ப்பு சாகுபடியில் பல விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நெல் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, நெல் சாகுபடியின் அறுவடை தருணத்தில் ஊடுப்பயிராக சவுக்கு பயிரை நடவு செய்வதும் பாதிக்கப்பட்டது.

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இப்பணி வறட்சியின் காரணமாக முடங்கியது.

இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட லேசான மழை ஈரம் சில இடங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி சாகுபடிக்கான சாத்தியங்கள் இருக்குமா என்பது விவசாயிகளுக்கே சந்தேகம் தான்.

கடந்த சில நாள்களாக ஆயக்காரன்புலம், மருதூர் உள்ளிட்ட கடைவீதிகளில் சவுக்கு கன்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் விவசாயிகள், கன்றுகளை கடையாக விரித்து வருகின்றனர்.

வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் கன்றுகள் விற்று முடியும் நிலமை மாறி, தற்போது வாங்குவதற்கு ஆளில்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.

இங்குள்ள கத்தரிப்புலம், குரவப்புலம் கிராமங்கள் மட்டுமல்லாது கடலூர் மாவட்டங்களில் இருந்தும் கன்றுகள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், விற்பனை என்னமோ மோசம் தான்.