Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்

What happened in the Tamil Nadu Legislative Assembly TN Governor RN Ravi explain smp
Author
First Published Feb 12, 2024, 2:54 PM IST

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடரானது வருகிற 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடியது. அப்போது,  தமிழக அரசு தயாரித்த உரையுடன் உடன்படவில்லை என கூறி அதனை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆனால், அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது எனவும், தமிழக அரசு தயாரித்து தந்த ஆளுநர் உரை அவைக்குறிப்பில்  இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசியகீதம் இறுதியிலும் பாடப்படுவது தான் சட்டசபையின் மரபு. அந்த மரபுகளை மீறும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி தேசிய கீதத்தையே இரண்டு முறை ஆளுநர் இசைக்கச் சொல்வதாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு தயாரித்து தந்த வரைவு உரை கடந்த 9ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு வந்தது. அதில், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்கள் இருந்தன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும். ஆளுநரின் உரையானது அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். அதனை சட்டமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர, அரசியல் கருத்துக்களை வெளியிடும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது.” என்பன உள்ளிட்ட சில ஆலோசனைகளுடன் தமிழக அரசு அனுப்பிய வரைவு உரைக்கான கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் காங்கிரஸில் இருந்து விலகல்: என்ன காரணம்?

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: “ஆளுநர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி ஆளுநர் பேசினார். அதன்பிறகு, அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு, உண்மைக்கு புறம்பாக தவறான அம்சங்கள் இடம்பெற்றிருந்த தமிழக அரசு தயாரித்து தந்த உரையை படிக்க இயலாமையை அவர் வெளிப்படுத்தினார்.

சட்டமன்றத்துக்கு தனது மரியாதையை தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார். அதன்பின் சபாநாயகர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். உரை முடியும் வரை ஆளுநர் அமர்ந்திருந்தார்.

சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும்சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூ கருத்தை வெளியிட்டார். ஆளுநரை நாதுராம் கோட்சேவை  பின்பற்றுபவர் என்று கூறினார். தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கௌரவத்தையும், அவரது நாற்காலியின் கௌரவத்தையும் சபாநாயகர் குறைத்தார். ஆளுநரை சபாநாயகர் தொடர்ந்து வசைபாடினார். இதையடுத்து, தனது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தை மதித்து சபையை விட்டு ஆளுநர் வெளியேறினார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios