What happened in Jayalalithyaa Kodanadu House

ஜெயலலிதா உயிரோடு இருந்தே வரை, யாரும் எளிதில் நுழைய முடியாமல் இருந்து கொடநாடு எஸ்டேட்டில், கொலையும் கொள்ளையும் நடந்திருப்பது, பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

அவர் இறந்தாலும், அவருடைய சொத்துக்களை விற்றோ அல்லது ஏலம் விட்டோ, அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், இரண்டு பொலீரோ வாகனத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு காவலாளியை கொன்றுவிட்டு, உள்ளே புகுந்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளை முயற்சி என்று கூறப்பட்டாலும், எஸ்டேட் பங்களாவில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாததால், அது கொள்ளை முயற்சியா? அல்லது கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வா? என்பதை யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.

அதனால், தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் இந்த கொலையும், கொள்ளை முயற்சி சம்பவமும் பல்வேறு சந்தேங்களை கிளப்பி உள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை வசூலிக்க, ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். 

அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள முக்கிய சொத்து கொடநாடு எஸ்டேட் தான். தற்போது இந்த எஸ்டேட், சசிகலா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடநாடு மேலாளர் நடராஜன் என்பவர் மூலம் சசிகலா குடும்பத்தினர் தான் இந்த சொத்தை கவனித்து வருகிறார்கள். 

விரைவில் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடும் என சொல்லப்படும் இந்த பங்களாவில் நடந்த இந்த கொலையும், கொள்ளையும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொடநாடு எஸ்டேட் என்பது யாரும் நுழைய முடியாத கோட்டை என்பதால், ஜெயலலிதாவின் சொத்து சார்ந்த ஆவணங்கள் அனைத்தும், கொடநாட்டில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்டு. 

இப்போது அந்த கோட்டையில் கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அங்கு கொள்ளையடிக்கப்பட்டது என்ன? என்பது தான் இப்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டு திணறும் தினகரன், கட்சியை விட்டு ஒதுக்கப்படும் சசிகலாவின் குடும்பம் என அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

இந்த நிலையில், சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு பங்களாவில் நடந்த கொலையும், கொள்ளை முயற்சியும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.