கன்னியாகுமரி

சொத்துகளைக் குவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது.

உச்ச நீதிமன்றத்தில் லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் மனு ஒன்று தொடுக்கப்பட்டது.

அதில், "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரத்தில் தங்களது சொத்துகள், மனைவி மற்றும் வாரிசுகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்; ஆனால், அவர்கள் அத்தகைய விவரங்களை வெளியிடுவதில்லை.

எனவே, வேட்பு மனுவில் வருமானத்துக்கான மூல ஆதாரம் குறித்த தகவலை வேட்பாளர்கள் தெரிவிக்க ஏதுவாக, ஒரு பத்தியை உருவாக்கும்படி உத்தரவிட வேண்டும்' என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் முன்பு நடைபெற்றபோது, அதுகுறித்து பதிலளிக்கக்கோரி, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.அப்துல் நாஸர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர அவசரம் காட்டவில்லை; எனினும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும், அதை அரசு ஏற்கும்' என்று வாதாடினார்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், வேட்பு மனு தாக்கலின்போது தெரிவித்திருந்ததை  விட, அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு தற்போது 500 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பிரமாணப் பத்திரத்தைச் சுட்டிக்காட்டி, நீதிபதிகள், “தேவைப்படும் விவரத்தை தாக்கல் செய்யாமல், தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர அவசரப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், மத்திய நேரடி வரிகள் வாரியம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் முழு விவரமும் இல்லை. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பதில் போதுமானதாக இல்லை.
அவை வெறும் எழுத்துகள் பதிவு செய்யப்பட்ட தாள்கள்தான். வெறும் அறிவிப்புகளை மட்டும் அரசு வெளியிடக் கூடாது.

இந்த விவகாரத்தில், மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால், எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

இதுதான், மத்திய அரசு செயல்படும் விதமா? இதுநாள் வரையிலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?

ஆதலால், இந்த விவகாரத்தில் வரும் 12-ஆம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

குறிப்பிட்ட ஏதேனும் விவரம், பொது மக்களுக்கு தெரியக் கூடாது என்று மத்திய அரசு கருதினால், அந்த பிரமாணப் பத்திரத்தை சீலிட்ட உறையிலிட்டு தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அதில் அந்த விவரத்தை பொது மக்கள் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கான காரணத்தையும் அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைக் கேட்ட மத்திய அரசு வழக்குரைஞர், சம்பந்தப்பட்ட தரப்பிடம் ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.