கரூர்

கரூரில் நெசவு உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்வதால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் துணிகளும் தேக்கமடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளதால் வேறு வேலைத் தேடி செல்கின்றனர்.

ஜி.எஸ்.டி-யில் விசைத்தறி நெசவுத் தொழிலுக்கு விலக்குக் கோரியும், நூலை நெய்தல், சாயமிடுதல், முடிபோடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பும்போது சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 14–ஆம் தேதி முதல் நெசவு உற்பத்தியில் ஈடுபடாமலும், விற்பனை செய்யாமலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிப்படைந்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரியில் விலக்கு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் கூடியுள்ளது. இதில் விசைத்தறி நெசவுத் தொழில் தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வரும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அறிவிப்பு எதுவும் வரவில்லை.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5–ஆம் தேதி மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் டெல்லியில் கூட உள்ளது. அதில் எதுவும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கின்றனர். அதற்கிடையில் நெசவு உற்பத்தியாளர்கள் தங்களது அடுத்த கட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த உத்தேசித்துள்ளனர்.

இந்த போராட்டத்தினால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. துணிகளும் பல கோடி ரூபாய் மதிப்பில் தேக்கமடைந்துள்ளன.

நெசவு உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் கீழ் மட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துணிகளை முடிச்சு போடும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். இதற்கு முன்பு இருந்த வருமானங்கள் தற்போது கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

நெசவு உற்பத்தியாளர்களை நம்பியிருந்த கூலித்தொழிலாளர்கள் சிலர் வேறு வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.