கோவை,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவதூறாக பேசி, அதிமுஅக் உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவை தொண்டாமுத்தூரில் உள்ள வங்கி ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஐயன்நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (41). இவருடைய மனைவி புனிதாதேவி (37). அ.தி.மு.க. உறுப்பினர். இவருக்கு தொண்டாமுத்தூர் 9–வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் மகளிர் சுயஉதவிக் குழுவையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், புனிதாதேவி கடந்த 7–ஆம் தேதி சுய உதவிக் குழுவுக்கு கடன் வாங்குவதற்காக தொண்டாமுத்தூரில் உள்ள கனரா வங்கிக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த நகை மதிப்பீட்டாளரான கோவை வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (51), வங்கி ஊழியரான ஊட்டியைச் சேர்ந்த ரமேஷ் (48) ஆகியோர் புனிதாதேவியிடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரவு செய்திகள் உண்மையா என்று கேட்டுள்ளனர். மேலும், தாங்கள் அறிந்த செய்திகளையும் பற்றியும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த புனிதாதேவி, ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். நாங்கள் அப்படித்தான் பேசுவோம், இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதாதேவி வங்கியை விட்டு வெளியேறி நடந்த சம்பவம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். அதை கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, ஆயுதபூசை விடுமுறைக்குப் பின்னர், அந்த வங்கி வியாழாக்கிழமை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புனிதாதேவி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அந்த வங்கிக்குச் சென்றார். அங்கு இருந்த சுரேஷ், ரமேஷ் ஆகியோரிடம் முதலமைச்சர் உடல்நிலை குறித்து ஏன் அவதூறாக பேசினீர்கள் என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர்களில் சிலர் புனிதா தேவியையும் மற்றவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புனிதாதேவி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வங்கி ஊழியர்கள் சுரேஷ், ரமேஷ் ஆகியோர் மீது அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், பொய்யான தகவல்களை பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் இருவரும் கோவை 6–வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவியல் நீதிபதி அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
