இராமநாதபுரம்

இராமேசுவரத்தில், “விவசாயத்தை காப்போம், 143 படகுகளை மீட்போம்” என்ற விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கைகளை சித்தரிக்கும் மணற்சிற்பத்தை அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார். இதனை மக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

“விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

நதிகளை இணைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். ஆனால், அதற்கான சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை மத்திய மோடி அரசு.

இதேபோல, இராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவையும் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே கிடக்கிறது. எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசோ, மாநில அரசோ எடுக்கவில்லை.

இந்நிலையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,

பயிர் கடன்களை ரத்து செய்யவேண்டும்,

இலங்கையில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 143 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும்” போன்ற விவசாயி மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பத்தை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

பரமக்குடியை அடுத்துள்ள வேந்தோணி கிராமத்தில் பணியாற்றும் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சரவணன் (36) இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.

அந்த சிற்பத்தில், “விவசாயி கண்ணீர் வடிப்பது போலவும், மீன்பிடி படகும்” இருந்தது.

மேலும், “விவசாயத்தை காப்போம், படகுகளை மீட்போம்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

இந்த மணல் சிற்பத்தை இராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.