அரியலூர்

பொன்னேரியில் டாஸ்மாக் சாராயக் கடையைத் திறந்தால் குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்று மக்கள் எச்சரித்தனர்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ளது பொன்னேரி.

இங்குப் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்பதை அறிந்த குருவாலப்பர் கோவில், பிச்சனூர், பூவாய் குளம், இடைக்கட்டு, ஆமணக்கன் தோண்டி, உட்கோட்டை, கொக்காரனை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துப் போர்க்கொடி தூக்கினர்.

அம்மக்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலை அருகே பந்தல் அமைத்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு கண்ணன் என்பவர் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:

“இங்கு டாஸ்மாக் சாராயக் கடை திறந்தால் குடி வெறியர்களால் பெண்கள் தனியாக நடமாட அச்சப்படுவர். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மேலும், சிறுவர்களையும் குடிக்கத் தூண்டும் என்று நாங்கள் அச்சப்படுகிறோம். மேலும், பொன்னேரியில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும், ரேசன் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம்” என்றும் எச்சரித்தனர்.