பெரம்பலூர்

பெரம்பலூரில் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் இலக்கான ரூ.112.50 கோடியில், இதுவரை ரூ.109.22 கோடி  பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், "பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயக் கடன்களை விரைவாக வழங்க வேண்டும்.

கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் மானிய விலையில் வைக்கோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விவசாயிகளின் பயிர்களுக்கேற்ப மானியம் வழங்க வேண்டும்.

மின்வாரியத்தின் மூலமாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

மின்சார இணைப்பு இலக்கை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கமளித்த மாவட்ட வருவாய் அலுவலர், "விவசாயிகளுடைய கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது.  

பெரம்பலூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க் கடன் இலக்கீடான ரூ. 112.50 கோடியில், இதுவரை ரூ.109.22 கோடி  வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.    

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் துணை மண்டல மேலாளர் (பொ) பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செ. கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.