அரியலூர்

விவசாயிகள் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியர் க.இலட்சுமிபிரியாவிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் க.இலட்சுமிபிரியாவிடம் அளித்தனர்.

அந்த மனுவில், "திருமழப்பாடி கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் நடக்கிறது.

இந்த நிலையில், இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தற்சமயம் நீர்வரத்து இல்லை. இங்கு கடந்த பத்து ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து, தொடர்ந்து மணல் அள்ளப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி அமைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.