பெரம்பலூர்

பெரம்பலூரில், தன்னை கொல்லவந்ததால் பிரபல ரௌடியை கொன்றோம் என்று சரணடைந்த ஆறு பேரை காவலாளர்கள் சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா விஸ்வாம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் தேஜா (30). பிரபல ரௌடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தேஜா உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து வழக்குபதிந்த காவலாளர்காள் தேஜாவை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஐந்து பேர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவே சரணடைந்தனர்.

இதனையறிந்த பெரம்பலூர் காவலாளர்கள் அங்கு சென்று, அந்த ஐந்து பேரையும் பெரம்பலூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் அழகிரி (33), பெரம்பலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் சசிதரன் (25), துறைமங்கலம் கே.கே.நகரைச் சேர்ந்த நாராயணன் மகன் கபிலன் (22), சார்லஸ் மகன் வினோத் (23), பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்த குமார் மகன் நீலகண்டன் (23) என்பது தெரிந்தது.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரௌடி பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்தான் இந்த தேஜா என்றும், அழகிரியை கொலை செய்ய முயன்றதால் இவர்கள் ஐவரும் சேர்ந்து காரில் சென்று தேஜாவை எளம்பலூர் பெரிய ஏரிக்கு தூக்கிவந்து வெட்டி கொன்றுள்ளனர் என்பது தெரியவந்தது..

இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினோத் (32) என்பவரும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்த காவலாளர்கள் அழகிரி, சசிதரன், கபிலன், வினோத், நீலகண்டன், மற்றொரு வினோத் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.

அதன்பின்னர் அவர்களை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.