பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மாவட்டம் தோறும் இளைஞரணி நிர்வாகிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வருகிறார். புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டம், திருச்சி வடக்கு, தெற்கு மற்றும் மத்திய இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு ஆய்வுக்கூட்டங்கள் - இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த மாவட்டங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொண்டார்.
பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களை வறண்ட மாவட்டம் என பொதுவாக சொல்வர். ஆனால், கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் இம்மாவட்டங்கள் தான் செழிப்பான மாவட்டங்கள் என்றார்.
நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்கள் தமிழ்நாட்டில் பலியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கு முழுப்பொறுப்பு மத்தியில் ஆளும் பாஜகவையே சாரும் என்றார். நீட் தேர்வு ரத்தாகும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசு கொண்டு வந்த "பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டம்" பலதரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்திய திராவிட மாடல் அரசை வேலைக்கு செல்லும் தாய்மார்கள் மனதார வாழ்த்துகின்றனர். இந்தியாவின் அத்தனை பொதுத்துறைகளையும் அதானியிடம் கொடுத்து வருகிறார் பிரதமர் மோடி. அவரது ஆட்சியில் அதானியின் ஒரு குடும்பம் மட்டுமே பயனடைந்து வருகிறது.” என குற்றம் சாட்டினார்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறையை வைத்து திமுகவை மிரட்டிப்பார்க்கிறது பாஜக. இதற்கெல்லாம் பயந்து படுக்க நாங்கள் அடிமை அதிமுக அல்ல. பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், வாராந்திர மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, தொழிலாளர் நலன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.10.6 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1,735 பயனாளிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலையை கேட்டறிந்து, எந்த தாமதமுமின்றி அவற்றை நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, பெரம்பலூர் மாவட்டம் சென்ற உதயநிதி ஸ்டாலின், ரூ.20.85 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை 987 பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூடத்தில் கலந்து கொண்டு, அம்மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை உதயநிதி ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
