மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம்!
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 2019ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது; இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்க மீட்பு: தயார் நிலையில் இருக்க அறிவுரை - முதல்வருடன் பேசிய பிரதமர்!
இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் முடிந்து மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது.
ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ஆனால், தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.