கரூர்

கரூரில், அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று அதிமுக அம்மா அணியினர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்ட அதிமுக அம்மா அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பி.சிவசாமி, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் ஆகியோர் ஆட்சியர் கோவிந்தராஜிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் கரூர் நகரில் உள்ளது. இங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவதன் மூலம் அனைத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

மருத்துவ கல்லூரி அமையவுள்ள இடத்தின் நான்கு புறங்களிலும் 24 மணி நேரமும் பேருந்து வசதி இருக்கிறது. இங்கிருந்து அரசுத் தலைமை மருத்துவமனை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது.

அதேபோன்று, காந்திகிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைந்தால் அவசரச் சிகிச்சைக்கு வெகு தொலைவில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி வருகிற 5-ஆம் தேதி கரூர் தாலுகா அலுவலகம் அருகே மக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம். எனவே, அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.