கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி கொண்டு இருக்கிறது. விவசாயம் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிலும் சென்னை நகருக்கு குடிநீர் ஆதராமாக உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னைக்கு தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

குறிப்பாக வடசென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை ராயபுரம் சிமிட்ரி சாலையில் உள்ள அண்ணா பூங்கா குடியேற்று நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த தண்ணீரும் போதுமானதாக இல்லை.

தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகள் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்டு உள்ளன. இந்த பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் சிறப்பாக இருந்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால், கடந்த 9ம் தேதி இரவு தேர்தல் ரத்து என அறிவிக்கப்பட்டது, அடுத்த நாள் (10ம் தேதி) தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. இதனால், மக்கள் மீண்டும் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தெரு தெருவாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தேர்தல் வருவதால் ஓட்டு வாங்க வேண்டும் என தினமும் குழாய்களில் தண்ணீர் விடப்பட்டது. தேர்தல் ரத்து ஆனதும், அதை நிறுத்திவிட்டனர். இதுபோன்ற ஏமாற்று வேலையை அரசு செய்தது நியாயமா என்றனர்.