மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து… 112 அடியை கடந்தது நீர்மட்டம்!!
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.68 அடியாக இருந்த இன்று 112.28 அடியாக உயர்ந்துள்ளது.
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 11,251 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,858 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 10,904 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 112.28 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 81.69 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 300 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,447 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,190 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 2,272 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 858 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரம் கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 111.68 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 112.28 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.