திருநெல்வேலி

தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்க காரணமான கூடங்குளத்தில் இயங்கும் இரண்டு அணு உலைகளும் இயங்காமல் இருப்பதால் தமிழகத்தில் எந்நேரமும் மின் தட்டுப்பாடு ஏற்படலாம்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு அணு உலைகளின் மூலம்தான் தமிழகத்திற்கு 1125 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. முதல் அணு உலை மூலம் 14 ஆயிரத்து 146 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பாரமரிப்பு பணிக்காகவும், எரிந்த எரிபொருட்களை அகற்றிவிட்டு புதிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்புவதற்காகவும் பிப்ரவரி 13–ஆம் தேதி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்த பணிகள் 65 நாட்களுக்குள் முடிவடைந்து மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் அணு உலையில் உள்ள முக்கியமான பகுதிகள், டர்பன் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இதுவரை முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்திச் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. டர்பன் ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக இரண்டாவது அணு உலையில் 4–ஆம் தேதி மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த பழுது சீரமைக்கும் பணியை ரஷ்ய நிறுவனம்தான் செய்யவேண்டும். ஆனால் தற்போது வரை ரஷ்ய நிறுவனத்தினர் கூடங்குளம் வராததால் பழுது சீரமைப்பதில் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளும் இயங்காமல் இருப்பதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 1125 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் மின் தட்டுப்பாடு ஏற்படலாம். இந்த மின் தட்டுப்பாட்டல் தமிழகமே இருளில் மூழ்கவும் வாய்ப்புகள் உண்டு.