உளுந்துார்பேட்டை

உளுந்துார்பேட்டை பேரூராட்சி பகுதியில் கொசுக்கள் அதிகரிப்பால் டெங்கு, தொற்று நோய் பரவும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உளுந்துார்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஓரிரு நாட்களாக பெய்த லேசான மழை, ஆங்காங்கே தேங்கி நிற்கும் குட்டை நீரால் கொசுக்கள், ஈக்கள் உள்ளிட்ட கிரிமிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதனால் இரவு நேரம் மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் கொசுக்களின் கடித்தொல்லையால் வேலைக்கு சென்று இரவு ஓய்வு எடுப்பவர்களை கொசுக்கள் துாங்கவிடாமல் துன்புறுத்தி வருகிறது.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம், வாரத்திற்கு ஒரு முறையாவது கொசு மருந்தினை முறையாகவும், முழுமையாக அடித்து தொற்று நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.