திருவிழாக் காலங்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி பாலகுருநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், திருவிழா காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆட்சியர் கணேஷும் இதுகுறித்து அறிவுரை அளித்தார். அதன்படி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பாலகுருநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, அசோக்குமார், அனிதா மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநான் பேசியதாவது, “ஆம்னி பேருந்துகளில் தீபாவளி உள்ளிட்ட திருவிழா காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணங்களை மட்டுமே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும். மீறினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சீட்டு மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்திருந்தார்.

மேலும் கூட்டத்தில் பயணிகள் முன்பதிவு செய்யும் இடங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க ஏதுவாக போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஆதிகாரிக்ள செல்லிடைப்பேசி எண்கள் அடங்கிய தகவல் பலகை பொது இடங்களில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.