Ward Reshuffle Resignation Complaint Days Tomorrow

கோயம்புத்தூர்

இன்று நடைபெற இருந்த வார்டு மறுவரையறை தொடர்பான மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "தமிழ்நாடு மாநில எல்லை மறுவரையறை ஆணையத்தின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, எல்லை மறுவரையறை செய்யப்பட்ட பட்டியல் மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது. அதன் மீது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துகள், ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது எல்லை மறுவரையறை ஆணையத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கூட்டரங்கில் ஜனவரி 31-ஆம் (அதாவது இன்று) தேதி, மண்டல அளவிலான கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எல்லை மறுவரையறை தொடர்பான கருத்துகள், ஆட்சேபணைகள் தெரிவித்த மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், நிர்வாக காரணங்களுக்காக ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 1-ஆம் (அதாவது நாளை) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.