தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு கொச்சினில் இருந்து ஐஎன்எஸ் டிஐஆர் போர்க்கப்பல் திடீரென வருகை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் அமைந்திருந்த 7 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது. இதனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்றும் அல்லது ஏற்கனவே ஊடுருவியவர்கள் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடலாம் என்றும் மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து தலைமை செயலகத்தில் கடந்த வாரம் அவசர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், வஉசி துறைமுகத்திற்கு கொச்சினில் இருந்து ஐஎன்எஸ் டிஐஆர் போர்க்கப்பல் திடீரென வருகை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூரில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர் சிக்கியதையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உளவுபிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்கப்பல் திடீர் வருகை குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொச்சினில் இருந்து வரும் இந்த கப்பலில், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் டீசல் நிரப்புவதற்காக வந்துள்ளது. மேலும், காய்கறிகள், உணவு பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள துறைமுகமான தூத்துக்குடிக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
