தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், “பூசாரிப்பட்டியில் 648 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது வாக்குச்சாவடி எங்கள் ஊரிலேயே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் சிரமமின்றி வாக்களித்தோம்.

இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி எங்கள் ஊரில் இருந்த வாக்குச்சாவடியை சுமார் 1½ கீ.மீ. தூரத்தில் உள்ள சோகத்தூருக்கு மாற்றி விட்டனர். இதனால் எங்கள் ஊரை சேர்ந்த வயது முதிர்ந்த வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே வாக்குச்சாவடி இடமாற்றத்தை திரும்பபெற வேண்டும்.

தற்போது சோகத்தூருக்கு மாற்றப்பட்டுள்ள வாக்குச்சாவடியை எங்கள் ஊருக்கே மீண்டும் மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் எங்கள் ஊரை சேர்ந்தவர்களுடைய பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலில், பூசாரிப்பட்டி என்று குறிப்பிடாமல் ஜடையகவுண்டன் கொட்டாய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மீண்டும் பூசாரிப்பட்டி என்று மாற்றித்தர வேண்டும்.”

என்று அந்த கோரிக்கை மனுவில் கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.