அதிர்ச்சியான வாக்காளர்.. கிளம்பிய புது சர்ச்சை..வாக்காளர் பட்டியலில் இந்தி மொழி..
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவையில் புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், வாக்காளர் ஒருவரின் பெயர் மற்றும் அவரது தந்தை பெயர் இந்தியில் இருந்ததது தற்போது சர்ச்சை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 69-ல் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் ஒருவரின் பெயரும், அவர் தந்தை பெயரும் இந்தியில் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மாறி வெளிவருவதாக குழப்பங்கள் எழுந்துவரும் நிலையில், பெயர்கள் வேறு மொழியில் வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வாக்காளர் பட்டியல், கடந்த டிசம்பர் 1 நாள் அன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகளும் 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 பேரும் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 பேரும் இருக்கின்றனர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 278 பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர்.
இதன்கீழ் வரும் மனோஜ் குமார் என்ற வாக்காளருக்குத்தான், அவருடைய பெயர் இந்தியில் அச்சிடப்பட்டட்டு வாக்காளர் பட்டியலில் வெளியாகியுள்ளது. மாநில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் பெயர்கள் அச்சிடப்பட்டு இருப்பது தற்போது விவாத பொருளாகி உள்ளது. அந்த வாக்காளர் பட்டியலில் பெயர் என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் இந்தியில் பெயர் உள்ளது. இதேபோல் மற்றவை பெயர் என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கும் இடத்திலும் இந்தியில் பெயர் உள்ளது.வாக்காளரின் பெயரும், அவரது தந்தையின் பெயரும் இந்தியில் வெளியானது சம்பவம் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபா சுங்கரா தெரிவிக்கையில், “கொடுக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு பூத் வாரியாக பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும். இந்த தவறுகள் குறித்து சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்த சர்ச்சை குறித்து தெரிவிக்கையில், “கணினி தொடர்பான பதிவேற்றத்தில் தவறு இருக்கலாம். இந்த தவறு விரைவில் சரி செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர் இருப்பது குறித்த புகைப்படம் வைரலான நிலையில், வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்து எப்படி வந்தது? இது கணினியின் தவறாகவே இருந்தாலும் அதிகாரிகள் ஏன் இதை முன்கூட்டியே கண்டறியவில்லை? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.