பிரபல திரைப்பட நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் அவர் வசித்து வந்த தெருவிற்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரைப்படங்களில் மக்களை கவர்ந்த விவேக்
திரைப்படங்களில் சின்னக்கலைவாணர் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆன நடிகர் விவேக், 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ம் ஆண்டு நவ.19ல் பிறந்தவர் விவேக் என்கிற விவேகானந்தன். 1987ஆம் ஆண்டில் இயக்குனர் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக நடிகர் விவேக்கிற்கு 2009ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை 5 முறைகள் வென்றவர் நடிகர் விவேக். நடிகர் விவேக், தமிழில் வெளியான ரன், சாமி, மற்றும் பேரழகன் ஆகிய 3 படங்களுக்காக சிறந்த காமெடி நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

திடீர் உடல்நிலை குறைவால் மரணம்
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மீது கொண்ட பற்று காரணமாக ஒரு கோடி மரம் நடும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் மரம் நடும் பணியை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து அடுத்த நாள் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால். சிகிச்சை பயனினின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.

சாலைக்கு விவேக் பெயர்
இந்தநிலையில் விவேக் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த தெருவில் உள்ள சாலைக்கு நடிகர் விவேக் பெயரை வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அப்போது உறுதியளித்ததாக நடிகர் விவேக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி படத்தை வீசுறீங்களா ? கொந்தளித்த கோவை பாஜகவினர்..ஆட்சியர் அலுவலகத்தில் அடாவடி சம்பவம் !
