ராமமோகன ராவின் மகன் விவேக்கிடம் தொடர்ந்து விசாரணை… மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவு…
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ராமமோகன ராவ் மகன் விவேக்குக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் தன்னுடைய மனைவியின் பிரசவ காலம் எனக்கூறி ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் விவேக்கை கைது செய்து விசாரிக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் நேற்று மாலை திடீரென நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு வந்த விவேக்,
விசாரணை குழுவினர் முன்பு ஆஜராகி பணம் மற்றும் நகைகள் வாங்கியது மற்றும் சொத்து ஆவணங்களுக்கான ஆதாரங்களை கொடுத்தார். பின்னர் அவரிடம் 85 கேள்விகள் கேட்டனர். தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதை வருமான வரித்துறை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் விவேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்த மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
