இராயக்கோட்டை,
கிருஷ்ணகிரியில் 30 அடி ஆழ தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் விழுந்த 10 வயதுமிக்க பெண் யானையை ஏழு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா இராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்பு காடு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ஓசூர் சானமாவு காட்டிற்கு 40 யானைகளை வந்தனர்.
இவற்றை வனத்துறையினர் ஊடேதுர்க்கம் காட்டிற்கு விரட்டினார்கள். தற்போது அந்தப் காட்டில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சாப்பிட்டு வந்தன.
இந்த நிலையில் ஊடேதுர்க்கம் காட்டில் உள்ள 40 யானைகளும் நேற்று முன்தினம் இரவு உணவுக்காக வெளியே வந்தன. அவை அருகில் உள்ள தொட்டே திம்மன அள்ளி ஊராட்சி வெப்பாலம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றன. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, ராகி, காய்கறி பகுதிக்குள் நடந்து சென்று சாப்பிட்டுன. இவற்றால், யானை சாப்பிட்டது போக, மீதி, அவற்றின் காலால் மிதிபட்டு சேதமடைந்தன.
பின்னர் 40 யானைகளும் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மீண்டும் ஊடேதுர்க்கம் காட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தன. வெப்பாலம்பட்டி ஏரி அருகில் இரயில்வே பாலம் பக்கமாக யானைகள் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள பெண் விவசாயி ரோஜாவுக்கு சொந்தமான நிலம் பக்கமாக யானைகள் சென்றன.
அப்போது யானைகள் கூட்டத்தில் இருந்த 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் இருந்த 30 அடி ஆழ தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்ததும், யானை பயங்கர சத்தத்துடன் பிளிறியது. இந்தச் சத்தம் கேட்டு மற்ற யானைகள் கிணறு அருகில் சென்றன. அவை கிணற்றுக்குள் யானை விழுந்ததை பார்த்து பயங்கர சத்தத்துடன் சிறிது நேரம் பிளிறியது. பின்னர் யானைகள் அங்கிருந்து சென்று விட்டன.
இந்த நிலையில் யானைகள் பிளிறிய சத்தம் அதிகமாக வந்ததை கேட்டு விவசாய நிலங்களின் அருகில் உள்ள பொதுமக்கள் சிலர் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.
அப்போது கிணற்றுக்குள் ஒரு யானை சத்தம் போட்டபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ஆசீஷ்குமார் ஸ்ரீவத்சவா, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் மற்றும் வனத்துறையினர் வந்தனர். அதேபோல உதவி ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய்த் துறையினரும், தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் மற்றும் காவலாளர்கள் அங்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு இரு பொக்லைன்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கிணற்றின் அருகில் குழி வெட்டி யானை வெளியே வர பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காலை 9.45 மணி அளவில் மீட்பு பணிகள் தொடங்கியது. கிணறு அருகில் குழி வெட்டப்படுவதை பார்த்த கிணற்றின் உரிமையாளர் ரோஜா, அதிகாரிகளிடம், தான் அந்த கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்து வந்ததாகவும், தற்போது வறண்டு விட்டதாகவும், கிணற்றை வெட்டினால் தனக்கு விவசாயம் செய்ய முடியாது என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் பேசிய அதிகாரிகள், “ரோஜாவிற்கு விதவை உதவி தொகை கிடைக்கவும், சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்ய உதவிகள் செய்வதாகவும், அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்து தருவதாகவும்” தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தொடங்கியது.
சிறிய அளவிலான பொக்லைன் எந்திரங்கள் என்பதால் குழி தோண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இராட்சத பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு அருகில் வேகமாக குழி தோண்டப்பட்டது.
இதற்கிடையே கிணற்றுக்குள் விழுந்த பெண் யானை நீண்ட நேரமாக பிளிறியதாலும், யானைகள் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து விட்டதாலும், கிணற்றுக்குள் போதிய காற்று கிடைக்காததாலும் சோர்வுடன் காணப்பட்டது.
பின்னர் அந்த கிணற்றுக்குள் கரும்புகள் வெட்டி போடப்பட்டன. இதைப் பார்த்த யானை மெல்ல எழுந்து, கரும்புகளை ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டது. யானைக்கு வெல்லம் கலந்த நீர் உள்ளே வாளி மூலமாக கிணற்றுக்குள் இறக்கி வைக்கப்பட்டது. அதை யானை துதிக்கையால் உறிஞ்சி குடித்தது. அதன்பின்னரும் யானை சோர்வாக இருந்ததால் 2 டிராக்டர்களில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
கிணற்றின் மேலே இருந்தவாறு குழாய் மூலமாக யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தண்ணீர் உடம்பில் பட்டதும், யானை தெம்புடன் எழுந்து நின்றது.
இதனிடையே கிணற்றுக்குள் யானை விழுந்த தகவல் அறிந்ததும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அங்கு வந்தார். அவர் யானையை மீட்க வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
மேலும் வெப்பாலம்பட்டி, தொட்டேதிம்மனஅள்ளி, உல்லட்டி, கெலமங்கலம், இராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு வந்தனர். அவர்கள் யானையை கிணற்றில் இருந்து மீட்பதற்காக எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆச்சரியமாக பார்த்தனர். சிலர் கிணற்றின் மேலே நின்றவாறு யானையை தங்களின் செல்போன்களில் படம் எடுத்து கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை காவலாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மாலை 4.30 மணி அளவில் கிணறு அருகில் முழுமையாக குழி வெட்டப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. பின்னர் யானை 4.45 மணி அளவில் அந்த பாதை வழியாக யானை முட்டிபோட்டப்படி வெளியே வந்தது. ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் யானையை மீட்டனர்.
கிணற்றுக்குள் இருந்து யானை வெளியே வந்ததும், பயங்கர சத்தத்துடன் பிளிறியபடி இரயில்வே பாலம் வழியாக ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி ஓடிச் சென்றது.
யானை தங்களது பயிர்களை சேதம் செய்திருந்தாலும், கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை திரும்பவும் தன் கூட்டத்தோடு சேர ஓடிச் சென்றதை பார்த்த மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.
