Virudhunagar district is the first among small grain produce
விருதுநகர்
தமிழகத்திலேயே சிறுதானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது என்று பாரம்பரிய மூலிகை கருத்தரங்கில் சித்த மருத்துவர் மீனா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருங்காட்சியகத்தில் பாரம்பரிய மூலிகை குறித்த கருத்தரங்கு காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் மீனா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்தில் உள்ள மூலிகைகள் மற்றும் சிறு தானியங்கள் மூலம் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
நெல் விவசாயம் செய்வதற்கு முன்னரே தினை, சாமை உள்ளிட்ட தானிய பயிர்களை நம் முன்னோர்கள் விளைவித்துள்ளனர். ஏனென்றால், தானிய பயிர்களில் புரோட்டின், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவு உள்ளன.
தமிழகத்தில், சிறு தானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. சித்த மருத்தவத்தை கடை பிடித்தால் நோயற்ற வாழ்க்கை வாழலாம்.
ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏதாவது ஒரு கீரை மற்றும் சிறு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாக அவர்களை எளிதில் நோய்கள் ஆட்கொள்ளாது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரம்மஸ்ரீ கோவிந்த வைத்தியர், மூலிகை செடிகளின் பயன்களையும், எந்தெந்த மூலிகை எதற்கு பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். மேலும், 500 மூலிகை செடிகள் குறித்த படங்களை அருங்காட்சியகத்திற்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மூலிகைச் செடிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் விவி வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கினர். இதில், அக்கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முருலெட்சுமிகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
