திருப்பூரில் வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். மர்ம காய்ச்சலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி சின்னசாமி. இவரது மகன் சந்துரு (13). இவர் பெரியாயிபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளியில் சக மாணவர்களுடன் சந்துரு விளையாடிக் கொண்டிருந்தபோது, மாணவன் சந்துருவுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சக மாணவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தருவதற்குள் சந்துரு மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே சந்துருவை பள்ளி ஆசிரியர்கள் மீட்டுச் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி காவலாளர்கள் சந்துருவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் மர்மமாக இறந்ததை குறித்து அவினாசி காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் உயிரிழக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
