Villagers who dared to oppose private company occupying their space

திருநெல்வேலி

தங்களுக்கு சொந்தமான இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்ததால் பொங்கி எழுந்த மக்கள், பள்ளி மாணவர்களுடன் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள எஸ்.சுப்புனாபுரம் கிராம பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது.

இதனையறிந்த அந்த கிராம மக்கள், தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்திற்கு திரண்டு வந்தனர். கிராம மக்களுடன் பள்ளிக்கூட மாணவ – மாணவிகளும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு, தாசில்தார் மேனகா மற்றும் காவலாளர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள், "எங்களது பட்டா நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைக்க முயற்சி செய்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரினர்.

அதற்கு அந்த நிறுவனத்தினர், "நாங்கள் கிரயம் செய்த நிலத்தில்தான் தொழிற்சாலை அமைக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள், "இரு தரப்பினரும் பிரச்சனைக்குரிய இந்த நிலத்திற்கான ஆவணங்களை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசி தீர்வு காணப்படும்" என்று பேசி சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.