Villagers flooded the city and flooded the villagers over night
திருவள்ளூர்
ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழையால் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமத்தில் வெள்ளமாய் புகுந்தது. இதனால் கிராம மக்கள் இரவு முழுவதும் தண்ணீரில் தத்தளித்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அம்மப்பள்ளியில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொற்றலை ஆற்றில் அதாங்க கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே சித்தூர் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் கால்வாய் வழியாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த தேவலம்பாபுரம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தது.
இதனால், சுமார் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். நேரம் செல்ல செல்ல கிராமத்திற்குள் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே போனது. இதனால், கிராம மக்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. நரசிம்மன், ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
கிராமத்தினர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தனர்.
நேற்று காலை கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது. மேலும் சித்தூரில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் காட்டாற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்து விடுமோ? என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
