புதுக்கோட்டை 

ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரகத்திற்கு திரளாக வந்த கிராம மக்கள் புதுக்கோட்டை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு முள்ளூர் ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளையக்கோன்பட்டியைச் பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "மன்னர் காலத்தில் இருந்து வெள்ளையன்கோன் பட்டியில் நாங்கள் வசித்து வருவது இனாம் நிலங்கள். இனாம் ஒழிப்பு சட்டம் 1963-க்கு பிறகு  நிலங்கள் அனைத்தும் ரயத்துவாரி சட்டத்தின் கீழ் அனுபவ ரீதியாக எங்களுக்கு சொந்தமாகி விட்டது. 

இந்த நிலையில், எங்களது நிலங்களை சட்டவிரோதமாக சிலர் அவர்களது பெயரில் கிரையம் பெற்றதாகக் கூறி நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மனு அளித்துவிட்டு வெளியே வந்த கிராம மக்கள் நிலங்களை ஆக்ரமித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால், ஆட்சியர் அலுவலககத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.