Village people asking drinking water held in road block protest

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று வெற்றுக் குடங்களுடன் கிராம மக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் ஊராட்சியில் ஐந்து நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்கும், பிற அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர். 

இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில் எச்சூரில் குடிநீர் வழங்கக் கோரி வெற்றுக் குடங்களுடன் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது தங்கு தடையின்றி நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். 

மக்கள் திடீரென மேற்கொண்ட இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.