திருப்பூர்

அளவுக்கதிகமாக மண் எடுக்கப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாகி இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்ப பெறக் கோரி பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா கணபதிபாளையம் வருவாய் கிராமத்தில் மலையம்பாளையத்தில் உள்ள ஒரு குட்டையில் வண்டல் மண் எடுக்க தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இதில் அரசின் வரைமுறைப்படி குறிப்பட்ட அளவுப்படிதான் மண் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் குட்டையில் அளவுக்கதிகமாக மண் எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க திருப்பூர் உதவி ஆட்சியர் ஷ்ரவன்குமாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட குட்டைக்கு உதவி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, அந்தக் குட்டையில் அளவுக்கதிகமாக மண் எடுத்தது உறுதி செய்யப்பட்டு இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில், கணபதிபாளையம் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த விஜயராஜை, கடந்த 21–ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்து உதவி ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று காலை 10 மணி முதல் பல்லடம் தாசில்தார் அலுவலத்தில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

“கிராம நிர்வாக அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்ப பெறும் வரை தங்களது உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்” என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.