சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்பு.!பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வுபெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த எட்டு மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி டி.ராஜா, மே 24ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, மே 25 முதல் மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிவருகிறார்.
புதிய தலைமை நீதிபதி
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாம்பே மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி, ஜல்கான் ஜனதா சககாரி வங்கி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.1991 முதல் 2010 வரை எம்.பி. சட்டக் கல்லூரியில் கௌரவ பகுதி நேர விரிவுரையாளராக இருந்துள்ளார்.
பதவிபிரமாணம் செய்து வைத்த ஆளுநர்
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி கங்காபூர்வாலா, இன்று காலை 10 மணிக்கு ஆளுனர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
துரைமுருகன்-ஓபிஎஸ் பங்கேற்பு
சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் நீதிபதி கங்காபூர்வாலா, அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் சொத்துகள் முடக்கம்; கல்லால் நிறுவன வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!