Asianet News TamilAsianet News Tamil

மது பாட்டில்களில் சிறுமியின் புகைப்படத்தை ஒட்டுங்கள் - விஜயகாந்த்!

தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்

Vijayakanth urges tn govt to paste vellore girl photo in liquor bottles to create awareness
Author
First Published Jun 5, 2023, 3:50 PM IST

வேலூர் மாவட்டம் சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளியான இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (வயது 17), என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் இருக்கின்றனர். பிரகாஷ் பிளஸ் 2 முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

விஷ்னுபிரியாவின் தந்தையான பிரபு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த விஷ்ணுபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்த விசாரணையின்போது, சிறுமி விஷ்ணுபிரியாவின் வீட்டில் அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தனது ஆசை அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனவும், தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக காணும் போதுதான் தமது ஆத்மா சாந்தியடையும் எனவும் சிறுமி உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

சிறுமியின் இந்த மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமி விஷ்ணுபிரியாவின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வேலூர், சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா,தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமி விஷ்ணுபிரியாவின் படத்தை மதுபாட்டில்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மதுபாட்டிலில் ஒட்டப்படும் சிறுமியின் புகைப்படத்தை பாா்த்தாவது ஒவ்வொரு தந்தையும் குடிபழக்கத்தை கைவிட வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios