vijayabaskar presmeet about bus strike

போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நேற்று 5வது கட்டமாக நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.

இதில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டூம் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.இதனால், இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்த தொழிலாளர்கள், நேற்று முதல் திடீரென தொடங்கிவிட்டனர். இதனால், பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் 10 தொழிற் சங்கங்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளன. 7 சங்கங்கள் பங்கேற்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன் நாளை மறுநாள் அவர்களது கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அனைதது பஸ்களும் 100 சதவீதம் இயக்கப்படும். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்கள், அரசு பணிமனைகளை அணுகலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

சில நாட்களில், போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். முழு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட வேண்டும்.

மக்களின் சிரமத்தை போக்க சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறையில் பேசி இருக்கிறோம். அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோல், சென்னை மெட்ரோ ரயிலில், 40 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.